ஸ்ரீ ஸ்ரீ மும்முடி சோழ சக்ரவர்த்தி இராஜேந்திர தேவர்

IMG_9152284877718

கங்கை கொண்ட சோழபுரம்

kangai konda cholapuram

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும்( வானதி)மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது.தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இன்றைய மலேசியாவில் கெடா ( கடாரம் ) bujang Valley மலேசியன் தொல்லியியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் ஆவணங்கள்.

சோழன் வென்ற கடாரம்

மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, தமிழ் வரலாற்றில் புகழ்ந்து கூறப்படும் கடாரம் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிபு. இங்கு நடத்தபட்ட அகழ்வாராய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட அரும்பொருள்களைக் கொண்டு மலேசிய அரசு இங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைத்துப் பராமரித்து வருகிறது.
சோழர் துறைமுகமான காவேரிப் பட்டினத்தையும் (இதனை தாலமியும் பெரிப்லசும் ‘காபேரிஸ் எம்பொரியன்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்) அல்லது பல்லவத் துறைமுகமான மஹாபலிபுரத்தையும் விட்டுப் புறப்பட்டு கிழக்கு முகமாகப் போகும் இந்திய வணிகர்கள், முதலில் காணக் கூடிய நிலம் கெடா சிகரமாகும் (குனோங் ஜெராய்). இந்த குனோங் ஜெராயை மாலுமிகள் கலங்கரை விளக்கம் போல் பாவித்தனர். குனோங் ஜெராய் (1217 மீட்டர் உயரம்) கடலில் 100 மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கக் கூடியது. இந்தக் கப்பல்களுக்கு வழிகாட்ட சிகரத்தில் நெருப்பு மூட்டப்படும். இந்த சிகரத்தின் வழிகாட்டலில் கப்பல்கள் மெர்போக் முகத்துவாரத்தை அடையும். இதுவே கடல் பயணிகளுக்கு ஓர் அடைக்கலம். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாக்கா நீரிணைக்குள் நுழைய ஒரு வசதியான இடத்தில் அமைந்திருந்தது. வடகிழக்கு பருவக்காற்றுக்கு மலாய்த் தீபகற்பமும் தென்மேற்குப் பருவக்காற்றுக்கு சுமத்திராவும் தடுப்புக்களாக இருந்தன. உட்பிரதேசத்திலிருந்து வரும் வன உற்பத்திகளுக்கும் தங்கம், ஈயம், இரும்பு ஆகிய உலோகங்களுக்கும் வர்த்தகம் அதிகம் இருந்தது. இங்குதான் பண்டையக் கெடாவின் இந்திய மய அரசான பூஜாங் பள்ளத்தாக்கு உருவானது. இந்தியா, இந்தோனேசியா, சீனா இடையிலான கடல் வணிக வழியில் அது அமைந்திருந்தது.
பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை முக்கியமாக இரண்டு வழிகளில் அறியலாம். இலக்கிய ஆதாரங்கள், மற்றும் அகழ்வாய்வியல் ஆதாரங்கள். இலக்கிய ஆதாரங்கள் இந்தியர்களின் காப்பியங்களிலிருந்தும் கவிதைகளிலிருந்தும் கிடைக்கின்றன. சீனர்களின் வம்சம் பற்றிய பதிவுகள், தேசாந்திரிகளின் குறிப்புக்கள், நில அமைப்பு பற்றிய குறிப்புகள், சமய யாத்திரிகர்களின் குறிப்புக்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்றன. அரபுக்களின் கடற்பயணிகள், புவியியல் பதிவுகள் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கின்றன. மலாய்ப் பதிவுகள் கட்டுக் கதைகளிலும் மாய மந்திரங்களிலும் புதையுண்டு கிடக்கின்றன.

இந்திய மூலங்கள்
பூஜாங் பள்ளத்தாக்கு தனது பெயரின் பொருளை ‘புஜங்க’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறுகிறது. புஜங்க என்பது நாகம் அல்லது கடல் நாகம் என்று பொருள்படும். ஆகவே பூஜாங் பள்ளத்தாக்கு என்பது நாக அல்லது கடல் நாகப் பள்ளத்தாக்கு. பிரம்மாண்டமாக வளைந்து வளைந்து ஓடும் மெர்போக் நதியிலிருந்து இந்தப் பெயர் வந்திருக்கலாம். மொழியின் மாற்றத்தால் புஜங்க என்பது பூஜாங் எனத் திரிந்திருக்கலாம். மலாய் மொழியில் பூஜாங் என்பது பிரம்மச்சாரியைக் குறிக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்குக்கும் இந்தச் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் பொருளும் இல்லை. புஜங்கவிலிருந்து பூஜாங் பிறந்திருக்கும் என்பதே சாத்தியமாகத் தெரிகிறது. மெர்போக் நதியின் கிளை நதியாக சுங்கை பூஜாங் என ஒன்றுள்ளது. ஆய்வாளர்கள் இந்தப் பிரதேசத்தை சுலபமாக அடையாளப் படுத்த அதனை பூஜாங் பள்ளாத்தாக்கு என அழைத்தனர்.
பண்டைய காலத்தில் கெடா, காழகம், கிடாரம், கடாரம், கடஹா என இந்தியர்களால் அழைக்கப்பட்டது. கெடா பற்றிய (பூஜாங் பள்ளாத்தாக்கு) முதல் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்துப்பாட்டு தொகுதியில் உள்ள பட்டினப்பாலை, கெடாவைக் காழகம் எனக் குறிப்பிடுகிறது. பட்டினப்பாலை, புகார் (காவிரிப்பட்டினம்) பற்றி விரிவான வருணனையைத் தருகிறது. நீலகண்ட சாஸ்த்திரி காழகத்தின் விளைபொருள்கள் புகார் வீதிகளில் இருந்தன என்று கூறுகிறார். சிலப்பதிகாரம் என்னும் சங்க இலக்கியம்,காழகத்திலிருந்து வந்த கிதரவன் சந்தனம், பட்டு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. காழகம் என்பது கடாரத்தின் திரிபே என்றும் கூறுகிறார்.
ஆர்.சி.மஜும்தாரின் கூற்றுப்படி, இலக்கியம் ஒரு காலத்திய நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவ காலத்துக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலும், அதற்கு உடனடியாகப் பின் வந்த நூற்றாண்டுகளிலும் இந்தியாவில் வணிகமும் வியாபாரமுமே தலையாய நடவடிக்கைகளாக இருந்திருக்க வேண்டும். தென் இந்தியா, கெடாவுக்கு நேரான அட்சரேகையில் உள்ளதால், வங்காள விரிகுடா கப்பல் போக்குவரத்துக்கு வசதியான புறப்படும் மற்றும் அணையும் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும்.
பெரிய லெய்டன் கிராண்ட் என்று அழைக்கப்படும் தமிழ்க் கல்வெட்டு (1006ஆம் ஆண்டு) ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி விஹாரத்துக்காக ஒரு கிராமத்தின் வருமானத்தை கடாரத்தின் ஆட்சியாளரான சூளாமணிவர்மதேவன் என்பவருக்கு அளித்தார் என்ற செய்தியையும், அவருக்குப் பின் அவர் மகன் மஹாவிஜயதுங்கவர்மன் என்பவருக்கு அது தொடரப்படவேண்டும் என்ற செய்தியையும் கொண்டிருக்கிறது. இவர்கள் கடாரத்தின் சைலேந்திர அரசர்களாகவே இருக்க வேண்டும். மஜும்தாரின் கூற்றுப்படி 8ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாவாவின் சைலேந்திர வழித்தோன்றல்களே ஸ்ரீ விஜயாவையும் கடாரத்தையும் ஆண்டு வந்தனர்.
685 முதல் 1025 வரை மலாயாத் தீபகற்பத்தின் மேற்குக் கரை ஸ்ரீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தது. இதன் தலைநகர் தென் சுமாத்திராவில் உள்ள பலெம்பாங். சீன மூலங்களின் படி இந்த அரசு ‘இரண்டு துருவ’அரசு எனவும் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள கடாரம் அதன் வடக்குத் தலைநகர் என்றும் வருணிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜசோழனின் ஆட்சியின் போது (985-1014), அவர் தமது மகன் முதலாம் ராஜேந்திர சோழனை, இந்திய மற்றும் தென்கிழக்காசிய அரசுகளை ஆக்கிரமிக்குமாறு பணித்தார். முதலாம் ராஜேந்திர சோழன் (1014-1044) 1023-1044க்கு இடையில் அந்தப் படையெடுப்பை நிகழ்த்தினார். நீலகண்ட சாஸ்த்திரியின் கூற்றுப்படி இந்தப் படையெடுப்பு நாட்டை அபகரிக்க நடத்தப்பட்ட படையெடுப்பல்ல. படையெடுப்பு முடிந்தவுடன் ராஜேந்திர சோழன் அங்கிருந்து அகன்றுவிட்டார். யாரையும் அவர் ஆட்சியில் அமர்த்தவில்லை. அடங்கி நடக்கவும் திரை செலுத்தவும் ஒப்புக்கொண்ட உள்ளூர் அரசர்களே தொடர்ந்து ஆள அவர் அனுமதித்தார்.
மஜும்தாரின் கூற்றுப்படி ராஜேந்திர சோழன் மலாய்த் தீவுக் கூட்டத்தில் 13 அரசுகளை வீழ்த்தினார். சில இடங்களில் மட்டும் ராணுவக் குடியிருப்புக்களை அமைத்துள்ளார்.
தஞ்சாவூர் ராஜராஜேஸ்வர ஆலயத்தில் தெற்குச் சுவரில் உள்ள 1030ஆம் ஆண்டுத் தேதியிடப்பட்ட பிரசஸ்தியில் (மெய்கீர்த்தி) ரஜேத்ந்திர சோழனின் ஆக்கிரமிப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரசஸ்தியை நீலகண்ட சாஸ்த்திரி இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்:
“ராஜேந்திரன் அலைகடல் நடுவில் பல கப்பல்களை அனுப்பிய பின், கடார மன்னனான சங்கர-விஜயோதுங்கவர்மனைச் சிறைப்பிடித்து அவன் யானைகளையும் படைகளையும் வென்று, அந்த மன்னனின் குவிந்த செல்வத்தையும் கைப்பற்றினார்; பெரும் ஆரவாரத்துடன் அவன் தலைநகரில் உள்ள வித்யாதரத்தோரணம் என்னும் வாயிலையும் கைப்பற்றினார. ஸ்ரீ விஜயா அலங்காரமான பெரு வாயிலையும் மணிகள் பொதித்த சிறு வாயிலையும் உடையதாக இருந்தது. பன்னியில் குளியல் துறைகளும், புராதன மலையூரில் மலைகளின் அணிகளும், மயூரிடிங்கத்தில் சுற்றியுள்ள கடல் பாதுகாப்பும் இலங்காசுகா பெரும்போரிலும் அச்சமில்லாமலும் இருந்தன.
மாப்பபாலம் தனது தற்காப்புக்கு ஆழமான கால்வாயைக் கொண்டிருந்தது; மேவிலிம்பங்கம் அழகிய சுவர்களால் சூழப்பட்டிருந்தது; வலைபனதுரு காடாலும் சோலைகளாலும் காவல் காக்கப்பட்டது; தலைத்தக்கோலம் அறிவியலறிந்த அறிஞர்களால் புகழப்பட்டது; மடமலிங்கம் அபாயமான போர்களில் வெல்லக்கூடியது; இளமுறிதேசத்தின் பெருமை போரில் காட்டும் வீரத்தில் தெரியும்; நக்கவாரத்தின் தோட்டங்களில் தேன் சொறியும்; கடாரத்தின் அசுர பலம் ஆழ்கடலால் காக்கப்படும்”.

இதில் குறிப்பிடப்படும் நாடுகளைப் பின்வருமாறு அடையாளம் காணலாம்:
கடாரம் – பூஜாங் பள்ளத்தாக்கு, மலாய்த் தீபகற்பம்
ஸ்ரீ விஜயா – தென்மேற்கு சுமாத்திராவில் பாலெம்பாங்
பன்னி – சுமாத்திராவின் கிழக்குக் கரை
மலையூர் – 7ஆம் நூற்றாண்டின் மலாயு; அதன் பின் ஜம்பி
இலங்காசுகா – பட்டாணியில் உள்ள லங்காசுகா
தலைத்தக்கோலம் – கிரா குறுநிலத்தில் உள்ள தக்கோலா
மடமலிங்கம் – தம்ப்ரலிங்கா, சீனத்தில் தான்–மா–லிங், லிகோரில் உள்ளது.
மயூரடிங்கம் – சீனத்தில் ஜெ–லொ–திங், மலாய்த் தீபகற்பத்தில்.
மேவிலிம்பாங்கான் – கிரா குறுநிலத்தில் உள்ளது
மாப்பபாலம் – மயான்மாரில் பெகு கடற்கரையில்
வலைபனதுரு – சம்பாவில் பாண்டுரங்
இளமுறிதேசம் – அரபு லாமுரி; மார்க்கோ போலோவின் லாமுரி,வடசுமாத்திராவில்.
நக்கவாரம் – நிக்கோபார் தீவுகள்
திருவாலங்காடு செப்புப் பட்டயங்களில் ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு குறிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழனின் ஒரு பட்டம் “கடாரம் கொண்டான்”. கடாரத்தை வென்றவன் என்பது இதன் பொருள். ஆனால் ஏன் அவர் “ஸ்ரீ விஜயம் கொண்டான்” என்றோ “தலைதக்கோலம் கொண்டான்” என்றோ அழைக்கப்படவில்லை? ஏனெனில் கடாரம்தான் பண்டைய மலாக்காவின் நுழைமுகமாக தலையாய இடம் பெற்றிருந்தது. (பின்னர் மலாக்காவும் இன்றைய நவீன சிங்கப்பூரும் அந்த நிலைக்கு வந்தன.) கடாரத்தின் மீது ராஜேந்திர சோழன் நடத்திய படையெடுப்பு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டதால்தான் வேலூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லூர் அருகில் இந்த வெற்றியைக் கொண்டாட கடாரம் கொண்ட சோழபுரம் அமைக்கப்பட்டது. அதே போன்று சிவனுக்கான ஒரு கோயிலையும் கட்டி அதற்குக் கடாரம் கொண்ட சோழேஸ்வரம் (இப்போது பூமிஸ்வரா கோயில்) என்றும் பெயர் வைத்தார். திருவாரூர், அரியலூர் நகரங்களுக்கும் கடாரம் கொண்டான் என்றே பெயரிட்டார்.
ஸ்ரீ விஜயாவின் கோரிக்கையின் பேரில் வீரராஜேந்திர சோழன் கெடாவைக் கைப்பற்றி 1068இல் அதனை ஸ்ரீ விஜயாவிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ விஜயாவுக்கும் சோழப் பேரரசுக்குமிடையில் இணக்கமான உறவுகள் உண்டாயின.
சிறிய லெய்டன் கிராண்டின்படி (1090ஆம் ஆண்டு) கடாரத்தின் ராஜா கிடாரத்தரையா குலோத்துங்க சோழருக்கு இரண்டு தூதுக்களை அனுப்பினார். அவை 1006இல் நாகப்பட்டினத்தில் மாறவிஜயதுங்கவர்மன் கட்டும் பௌத்த விகாரத்திற்கு நிலதானம் கோரும் தூதுக்களாகும். குலோத்துங்க சோழன்,1070இல் சோழப் பேரரசின் சக்கரவர்த்தி ஆவதற்கு முன், கடாரத்தின் துணை நிலை ஆளுநராக இருந்திருக்க வேண்டும் என்றும் யூகிக்க முடிகிறது. பின்னர் குலோத்துங்க சோழன் (1070-1120) கடாரத்தின் மீது தாம் கொண்ட வெற்றியைக் கொண்டாட பொற்காசுகளை வெளியிட்டிருக்கிறார். புராதனக் கதைகளின்படி குலோத்துங்க சோழன் மலைநாடு கொண்ட சோழன் என்றும் கடை கொண்ட சோழன் என்றும் வருணிக்கப்பட்டுள்ளார்.
11ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீ விஜயாவுக்கும் கடாரத்துக்கும் இடையிலான உறவு மிகவும் சுமுகமாக இருந்தது.
வட இந்தியாவின் குப்த வம்சம் (320 முதல் 647 வரை) கங்கை நதிக்கரையின் பாடலிபுத்திரத்திலிருந்து கெடாவுடன் வர்த்தகம் புரிந்திருக்கிறது. 4ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத இலக்கியமான சுபாரஜாதகம் சுவர்ணபூமியில் லங்கா-ஷோபா என்றும் (பட்டாணி) கடக-த்விபா (கெடா) என்றும் இரண்டு துறைமுகங்களைக் குறிக்கிறது. 7ஆம், 8ஆம் நூற்றாண்டின் கௌமுடி மஹோத்சவம் மற்றும் கதா இலக்கியங்கள் கெடாவை, கடஹ என்றே குறிப்பிடுகின்றன. கதாசரித்திரசாகரம் என்னும் நூல் குணவதி என்னும் இளவரசி கடஹாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் ஸ்வர்ணதீபத்தின் கடற்கரையில், அவள் கப்பல் உடைந்ததாகக் கூறுகிறது. இதில் கடஹத்தின் சிறப்புக்கள் கூறப்படுவதுடன் கடஹ எல்லா இன்பங்களின் இருப்பிடம் என்றும் கூறப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டின் சமைரச்சகஹா என்னும் பிராகிருத நூல், தம்ரலிப்தியிலிருந்து கடஹத்வீபாவுக்கு சென்ற ஒரு பயணம் பற்றிக் கூறுகிறது. 8ஆம் நூற்றாண்டில் கடஹாவின் மன்னர் பெயர் ஸ்ரீவிசயாதிபதி கடஹதிபத்யம்-அதன்வதா என மஜும்தார் கூறுகிறார்.

சீன மூலங்கள்.
சீன பயணிகளுக்கு கெடா என்பது சியே-ச்சா, ச்சியா-ச்சா, ச்சி-தோ, ச்சி-தா, கியெ-ட்ச்சா என்னும் பெயர்களால் தெரிந்திருக்கிறது. சீன மாலுமிகள் தெற்குக் கடல்களில் நீண்ட காலமாகவே கப்பலோட்டி வந்துள்ளனர். ஹான், தாங், சோங், யுவான், மிங், வம்ச ஆட்சிகளின் போது சீன வணிகர்கள் மூலிகைச் சமையல் பொருள்களுக்காக இந்தியமய அரசுகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வாசனை மரப்பொருள்கள், மூலிகை சமையல் பொருள்கள், தந்தம், காண்டாமிருகத்தின் கொம்புகள், ஆகியவற்றை வாங்கி, உப்பு, அரிசி, பட்டு, களிமண் பொருள்கள், பளிங்குப் பொருள்கள் ஆகியவற்றை விற்றிருக்கிறார்கள்.
கெடாவுடனான அவர்கள் வர்த்தகம் இரண்டு வர்த்தக வழிகளில் நடந்திருக்கிறது. ஒன்று, மலாய்த் தீபகற்பத்தைச் சுற்றி பூஜாங் பள்ளத்தாக்கை நேரடியாக அடைதல். இரண்டு,ஸ்ரீ லங்காசுகாவிலிருந்து தீபகற்பத்துக்கு குறுக்கே போகும் வழி. தீபகற்பத்துக்குக் குறுக்கே போகும் இந்த வழியினால் இந்தச் சீனப் படகுகள் தாங்கள் போக வர உள்ள பயணத்தில் நான்கு மாத காலத்தை மிச்சப்படுத்த முடியும்.
3ஆம் நூற்றாண்டு முதல் பல பௌத்த மதப் பிரச்சாரகர்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே போய் வந்து புத்த சின்னங்களையும் நூல்களையும் சேகரித்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் பருவக் காற்றுகளின் மாற்றத்திற்காக கெடாவில் தங்கியிருக்கிறார்கள். இந்த புத்த மதப் பிரச்சாரகர்கள் பலர் கெடாவின் சிறப்பைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஹான் ஆட்சிக்காலத்தில், ஃபா-ஹியன் என்னும் புத்தப் பயணி 413இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நிலவழியாக படலிபுத்திரத்துக்குப் போனார். அங்கிருந்து கடல் வழியாகத் திரும்பினார்.
கெடா பற்றிய சீனப் பதிவுகளில் முக்கியமானது பௌத்த யாத்திரிகரான இ-ச்சிங் உடையது. அவர் 671இல் சீனாவை விட்டுப் புறப்பட்டு 672இல் பலெம்பாங்கை (ஸ்ரீ விஜயா) வந்தடைந்தார். இ-ச்சிங்கின் இந்தியாவுக்கான வழிப்பயணத்தை பால் வீட்லி இவ்வாறு எடுத்திரைக்கிறார்:
“20 நாட்களுக்குள் நாங்கள் ஷி-லி-ஃபோ-ஷியை (ஸ்ரீ விஜயா) வந்தடைந்தோம். அங்கே நான் ஆறு மாதங்கள் தங்கி சப்தவித்தியா (சமஸ்கிருத இலக்கணம்) கற்றேன். அரசர் என்னிடம் நட்பு பாராட்டி என்னை மெலாயு நாட்டுக்கு (ஜம்பி) அனுப்பினார். அங்கே நான் இரண்டு மாதங்கள் தங்கினேன். அங்கிருந்து நான் வேறு திசையில் திரும்பி ச்சியே-ச்சா (கெடா) சென்றேன். 12ஆவது மாதத்தில் நான் அரசரின் கப்பலில் இந்தியாவுக்குப் பயணமானேன். சியே-ச்சாவிலிருந்து 10 நாட்களுக்கு மேல் வடக்காகச் சென்று நிர்வாண மக்களின் நாட்டை (நிக்கொபார் தீவுகள்) அடைந்தோம்.
அங்கிருந்து வடமேற்காக அரை மாதம் பயணம் செய்து தான்–மொ–லி–தி (தம்ப்ராலிப்தி) வந்தடைந்தோம்.”
இ-ச்சிங் குப்த பேரரசில் நாளந்தா பல்கலைக் கழகத்தில் 12 மாதங்கள் பயின்றார். திரும்பி வரும் வழியில் மீண்டும் கெடாவில் தங்கினார். முதல் முறையாக 672இல் அவர் கெடாவில் தங்கியபோது அது சுதந்திர நாடாக இருந்தது. ஆனால் 685இல் அவர் திரும்பி வந்த போது கெடா ஸ்ரீ விஜயாவுக்குக் கீழ் வந்துவிட்டது. கெடா அந்தப் பிரதேசத்தில் வணிக மையமாக இருந்ததையும் நுழைமுகத் துறைமுகமாக இருந்ததையும் அவர் வருணித்துள்ளார். ஏறக்குறைய அதே காலத்தில் வூ-சிங் என்னும் இன்னொரு யாத்திரிகர் கெடாவுக்கு வந்து அங்கிருந்து நாகப்பட்டினம் சென்றுள்ளார். 638இல் கெடாவும் தனது தூதரை சீனாவுக்கு அனுப்பியுள்ளது.
கெடாவிலிருந்து நிக்கொபார் தீவுகளை அடைந்தவுடன் இந்த பௌத்த யாத்திரிகர் வழி இரண்டாகப் பிரிகிறது. ஒன்று குப்தப் பேரரசில் உள்ள தம்ப்ரலிப்தி, பாடலிபுரம் நோக்கி வடக்காகப் போகிறது; மற்றது யாத்திரிகர்களை நாகப்பட்டினம், காஞ்சிபுரம், ஸ்ரீ லங்கா நோக்கித் தெற்காக அழைத்து வருகிறது. இந்தப் பயணங்களின் காலத்தை வடகிழக்கு தென்மேற்குப் பருவக் காற்றுகளே தீர்மானிக்கின்றன. இவை எல்லாம் வங்காள விரிகுடாவுக்குக் கடக்கப் புறப்படும் இடமாக கெடாவே இருந்திருக்கின்றது என்பதையே நிருபிக்கின்றன. வூ-பெ-ச்சியின் வரைபடம் ச்சி-தா நதியின் முகத்துவாரம், கெடா பக்கத்தில் இருப்பதைக் காட்டுகிறது. சீனர்களின் வரலாற்றுப் புவியியல் தென்கிழக்காசியாவின் இந்திய மயமான அரசுகளை அடையாளம் காணப் பெரும் உதவியாக இருக்கின்றது.

அரபு மூலங்கள்
அரபுக்கள் கெடாவை கலா, கலா-பார் அல்லது காக்குலா என அறிந்திருந்தார்கள். அரபுப் பயணிகள், புவியியலாளர்கள் கெடாவைப் பற்றி அதிகம் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் மிக முக்கியமானது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பார்-அஸ்-சின் வால்-ஹிந்த். இது கலா, சபாஜின் (ஸ்ரீ விஜயா) கீழ் உள்ள நாடு என்றே கூறுகிறது.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அபு துலாஃப் மிசார், கலா மதில்களாலும் பூங்காக்களாலும் நதிகளாலும் சூழப்பட்டுள்ளது என்பதுடன் அங்கு சந்தைகளும் கொல்லர்களும் இருப்பதைக் குறிப்பிடுகிறது. பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்பதுடன் நீதிபரிபாலனம் உள்ள நாடு. நிறை பார்த்து விற்கப்படும் இறைச்சி,கோதுமை,காய்கறிகள், எண்ணிக்கையில் விற்கப்படும் ரொட்டிகள் ஆகியவற்றை மக்கள் உண்டனர். அவர்கள் உடை பற்றிக் கூறும்போது அவர்கள் நன்கு நெய்யப்பட்ட ஃபிரான்ட் (சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டு) அணிந்திருந்தனர் எனக் குறிப்பிடுகிறது. “இந்தக் கோட்டையில் உண்மையான இந்திய வாள்களான குவாலாய் வாள்கள் வார்க்கப்படுகின்றன. உலக முழுவதிலும் கலாவின் ஈயச் சுரங்கம் போல இன்னொன்றில்லை.” பூஜாங் பள்ளத்தாக்கில் மெர்போக்குக்குப் பக்கத்தில் சிமிலிங், துப்பா பகுதிகளில் அண்மைய காலம் வரை ஈயமும், இரும்பும் தோண்டப்பட்டே வந்தன.
சிந்துபாத்தின் நான்காம் பிரயாணத்தில் “நாங்கள் அல்-நாக்கூஸ் தீவிலிருந்து ஆறு நாட்கள் பயணம் செய்து கலாவை அடந்தோம். பின் கலா நாட்டுக்குள் நுழைந்தோம். அது இந்தியாவின் பக்கத்தில் உள்ள ஒரு பேரரசு. அங்கு ஈயச் சுரங்கங்கள், மூங்கில் தோட்டங்கள், அருமையான சூடம் ஆகியவை இருந்தன” என்று கூறப்பட்டுள்ளது.
மசுடி (முருஜ் அல்-தஹாப்) என்னும் நூலில் கூறப்பட்டிருப்பது: “அப்புறம் அந்த வணிகன் கடல் வழியாக கில்லா (கலா) என்னும் நாட்டுக்குப் போனான். அது சீனாவுக்குப் போகும் வழியில் பாதி வழியைக் கொஞ்சம் தாண்டி உள்ளது. இப்போது இந்த ஊர் சிராஃபிலிருந்தும் ஒமானிலிருந்தும் வரும் முஸ்லிம் கப்பல்கள், சீனக் கப்பல்களைச் சந்திக்கும் இடமாக இருக்கிறது. …. இந்த வணிகன் பிறகு ஒரு சீனக் கப்பலில் ஏறி கில்லாவிலிருந்து சீனாவுக்குப் போனான்.” இப்படி கலா பற்றிப் பல குறிப்புகள் அரபு மூலங்களில் உள்ளன.

மலாய் மூலங்கள்
பண்டைய கெடா பற்றி நம்பும்படியான எந்தக் குறிப்பும் மலாய்ப் பதிவுகளில் இல்லை. மலாய் மூலங்கள் அனைத்தும் தேவதைக் கதைகள், கட்டுக்கதைகள்,வீரதீரங்கள், மாயமந்திரங்கள் கலந்த நாட்டார் கதைகளாக இருக்கின்றன. அவற்றில் காலமும் இடமும் ஒரு மாயத் தன்மையோடு குழம்பி இருக்கின்றன. அவை கூறும் உண்மைகளை வரலாற்று உண்மைகளாக எடுத்துக் கொள்ள முடியாது. 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மெரோங் மஹாவங்சா, அதற்கும் பிறகு எழுதப்பட்ட அல்-தாரிக் சாலாசிலா நெகரி கெடா ஆகியவை புராணப் பிறவிகளும் கந்தர்வ மன்னர்களும் செய்த இயற்கையை மீறிய வீரதீரங்களைச் சொல்லுகின்றன. எனினும் இந்த படைப்புக்கள் 2ஆம் நூற்றாண்டு கெடாவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. மெரொங் மஹாவங்சா என்னும் பெயர் தமிழிலிருந்து வந்ததாக இருக்கலாம். மெரோங், மறவன் அதாவது வீரன், என்பதாக இருக்கலாம். மஹா என்பது மகத்தான; வங்சா என்பது வம்சம், அதாவது பாரம்பரியம். பெரும் பாரம்பரிய மறவன் என அதற்குப் பொருள் கொள்ளலாம்.

அல்-தாரிக் சாலாசிலா நெகரி கெடா சொல்வதன் படி கெடாவின் முதல் ராஜாவின் பெயர் மஹாராஜா தெர்ப ராஜா. இவர் பாரசீகத்தின் காமெரோனிடமிருந்து தப்பித்து வந்தவர். மேலும் கெடாவின் 9ஆம் ஹிந்து ராஜாவின் பெயர் ப்ரா ஓங் மஹவங்சா என்றும், அவர் ஹிந்து மதத்தைத் துறந்து இஸ்லாத்துக்கு மாறினார் என்றும் சொல்கிறது. அவர் தமது பெயரை முசாபார் ஷா (1136-1179) என மாற்றிக்கொண்டார். அவருடைய கல்லறை அண்மையில் கம்போங் லங்காரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கம்போங் பெங்காலான் பூஜாங் மற்றும் சுங்கை பத்து எஸ்டேட் இவற்றுக்கு இடையில் உள்ளது. அந்த இடத்தில் அண்மையில் கல்வெட்டு ஒன்று எழுதிச் சாத்தப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:
சுல்தான் முசாஃபார் ஷாவின் கல்லறை
மஹாராஜா தெர்ப ராஜா என்னும் இவர் கெடாவை 1136இல் ஆண்டார். அவருடைய நிர்வாகத் தலைநகர் புக்கிட் மரியமில் இருந்தது.
மாண்பு மிகு மன்னர் கெடாவில் இஸ்லாத்தைத் தழுவிய முதல் சுல்தான். தனது பெயரை சுல்தான் முசாஃபார் ஷா என மாற்றிக் கொண்டார்.
மாண்பு மிகு மன்னர் 1179இல் (575 ஹி) மரணமடைந்தார். பூஜாங் மாவட்டத்தில் கம்போங் லங்காரில் அடக்கம் செய்யப்பட்டார்.

 

1238945_735100236521689_786450159_n

1904271_735100199855026_2003509928_n

IMG_9423346169794

1238751_735102496521463_1587353838_n

1477384_735102683188111_1517547921_n

1896751_735103623188017_88161135_n

1901375_735102786521434_345602332_n

1902817_735103589854687_1870062053_n

1912105_735103439854702_490071866_n

1920581_735102963188083_1525546013_n

1922490_735103236521389_2104356931_n

1958258_735102996521413_136181782_n

1979680_735103809854665_1213490547_n

10001309_735103703188009_402662331_n

10007483_735102926521420_2054699274_n

10013645_735103259854720_308554494_n

10014553_735102886521424_1543570591_n